நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடலொன்று நிக்கவெரட்டிய பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய மேலதிக மாவட்ட செயலாளருமான ருவன் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் நிக்கவெரட்டிய பிரதேச செயலாளர் ரேணுகா பி.விஜேரூப தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் பாமில் கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலில் நிக்கவெரட்டிய பிரதேச செயலகப் பிரிவின் தன்னார்வச் சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், இயன்றளவு பங்களிப்பை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் தற்போது அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், நன்கொடையாளர்களின் உதவி இன்னும் கோரப்படுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.



















